
பத்து பஹாட், ஜூலை.02- வெள்ளைப் பலகை அழிப்பானை விட்டெறிந்து மாணவியைக் காயப்படுத்தியதாக ஆசிரியை ஒருவர் மீது இன்று பத்து பஹாட் Majistret நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் 47 வயதான Fakhriah Bustani எனும் அந்த ஆசிரியை சித்ரவதைச் சட்டத்தின் 323 பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்ட தம் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
பள்ளியில் பாட நேரத்தின் போது அந்த 7 வயது மாணவியை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சமாக ஈராயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம். அந்த ஆசிரியையை ஆயிரத்து 500 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அவ்வழக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே, பாடத்தைக் கவனிக்காததால் சம்பந்தப்பட்ட ஆசிரியை மாணவி மீது வெள்ளைப் பலகை அழிப்பானை வீசியது காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அச்சம்பவத்தில் மாணவியின் கண்ணின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டதை மருத்துவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.



