கோலாலம்பூர், டிசம்பர்-19, பத்து பூத்தே விவகாரத்தில் பொய் சொல்லியதாதக் கூறி, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட்டுக்கு எதிராக 20 அரசு சார்பற்ற அமைப்புகள் போலீசில் புகார் செய்துள்ளன.
மகாதீர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது அல்லது கவனக்குறைவாக செயல்பட்டது உள்ளிட்ட சாத்தியங்களை போலீசார் விசாரிக்க ஏதுவாக, அப்புகார் செய்யப்பட்டதாக Gerak Gempur Media Sosial Rakyat செயலகம் கூறியது.
பத்து பூத்தே இறையாண்மை கையாளப்பட்ட விவகாரம் தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தாங்கள் அப்புகாரைச் செய்ததாக, அச்செயலகத்தின் துணைத் தலைவர் ஷாபுடின் எம்புன் (Shahbudin Embun) சொன்னார்.
எந்தவோர் அதிகார துஷ்பிரயோகத்தையும் நாங்கள் அனுசரிக்க மாட்டோம் என, நேற்று டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் புகாரளித்தப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ஜோகூர், பினாங்கு, பெர்லிஸ் போன்ற மாநிலங்களிலும் மகாதீருக்கு எதிராக புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
பத்து பூத்தே இறையாண்மை மீதான விவகாரம் கையாளப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம், மகாதீர் மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்க பரிந்துரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல் முறையீட்டை மீட்டுக் கொண்டதன் மூலம், பத்து பூத்தேவை மகாதீர் சிங்கப்பூருக்குத் தாரை வார்த்திருப்பதாக அவ்வாணையம் கண்டறிந்துள்ளது.
ஆனால் அவ்விஷயத்தில் அனைத்து நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்தாக மகாதீர் தன்னைத் தற்காத்துப் பேசி வருகிறார்.