
பெரா, ஜூலை-4 – பஹாங், பெரா அருகே போதைப்பொருள் மயக்கத்திலிருந்த ஓட்டுநரின் MPV இரக வாகனம் மோதியதில், தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை 10 மணி அளவில் தெமர்லோ-பஹாவ் சாலையில் இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
AADK அதிகாரியான 37 வயது Sharif Ali, திரியாங்கில் இருந்து தெமர்லோ நோக்கித் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோலாலம்பூரில் இருந்து திரியாங் நோக்கி வந்த MPV வாகனம் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை பாதைக்குள் நுழைந்து அவரின் கார் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த Sharif சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
MPV வாகனத்தில் இருந்த ஓட்டுநரும் மற்றொரு பயணியும் இலேசான கால் காயங்களுடன் தப்பினர்.
MPV வாகனத்தின் 29 வயது ஓட்டுநரை பரிசோதித்ததில், அவர் Erimin 5 எனும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டதாக பெரா மாவட்ட போலீஸ் கூறியது.
இதையடுத்து, போதை மயக்கத்தில் வாகனமோட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவ்வாடவர் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.



