
நிபோங் திபால், நவ.27-பினாங்கு, Jalan Byram, Kampung Baruவில் நீர்ப்பாசனக் கால்வாய் கரையில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம், மியன்மார் நாட்டவருடையது என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. 20 வயதுகளின் இடைப்பகுதியில் இருந்த அந்நபரைத் அவரது தம்பி அடையாளம் கண்டதாக செபராங் பிறை தென் மாவட்டக் காவல்துறைத் தலைவர் Superintendan Jay January Siowou தெரிவித்தார்.
அந்நபர் கோலாலம்பூரில் வேலை செய்து வந்ததுடன், முறையான பயண ஆவணங்கள் மற்றும் பணி அனுமதியும் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. மேலும், யாரோ ஒருவரைச் சந்திப்பதற்காக அந்நபர் பினாங்கு வந்திருந்ததாக அவரது தம்பி கூறியுள்ளதாக Jay January தெரிவித்தார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது. சந்தேக நபரைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரியை 019-8282212 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மியன்மார் நாட்டவரின் சடலத்தை கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் பொதுமக்கள் கண்டெடுத்தனர். அச்சடலத்தின் தலையில் காயங்கள் இருந்தன. சம்பவ இடத்திற்கு அருகில் இரத்தக் கறைகள் கண்டறியப்பட்டதுடன், பலமான பொருளால் தலையில் தாக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.



