
பாலி, அக்டோபர்-17,இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலித் தீவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால், வாகனமோட்டிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகப் பல பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஓட்டுநர்கள் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
தொழில்நுட்ப சிக்கல்கள், மோசமான வானிலை மற்றும் திடீர் தேவை அதிகரிப்பு ஆகியவை இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
_”இது உலகளாவிய சந்தைப் பிரச்சனை அல்ல, மாறாக உள்நாட்டு விநியோகப் பிரச்சனை மட்டுமே”_ என எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சின் எண்ணெய் மற்றும் எரிவாயு இயக்குநர் ஜெனரல் Laode Sulaeman
தெளிவுப்படுத்தினார்.
நங்கூரக் கோளாறு மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் தாமதமானதே இதற்குக் காரணம் என்றார் அவர்.
இந்நிலையில், சேமிப்பு கிடங்குகளில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என பாலி ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, பல மில்லியன் லிட்டர் எரிபொருளைக் கொண்டுவந்த கப்பல் வந்திறங்கியதை அடுத்து, மாநிலத்திற்குச் சொந்தமான Pertamina நிறுவனம் விநியோகப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



