பினாங்கில் சாலை விபத்து; மது அருந்திய வாகனமோட்டியால் பலியான பெண்மணி

ஜார்ஜ்டவுன், ஜனவரி 5 – பினாங்கு தஞ்சோங் தொக்கோங் பகுதியிலுள்ள Jalan Lembah Permai சாலையில், நேற்றிரவு நடந்த சாலை விபத்தில், பாதசாரியான 67 வயதுடைய முதிய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்திற்கு காரணமான அந்த SUV வாகனம், Mount Erskine பகுதியிலிருந்து Tanjung Bungah நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தபோது, சாலையை இடப்புறத்திலிருந்து வலப்புறம் கடந்து சென்ற மாதுவை மோதியது என்று வடகிழக்கு மாவட்ட காவல் துறை தலைவர் Asisten Komisioner Abdul Rozak Muhammad தெரிவித்துள்ளார்.
இந்த மோதலால், அந்த பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில், SUV வாகனத்தை ஓட்டிய 51 வயதுடைய வெளிநாட்டு ஆடவன் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த வாகனமோட்டி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். அதே நேரத்தில் போலீசார் இவ்வழக்கை சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்து மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



