
ஜார்ஜ்டவுன், அக்-22-பினாங்கு பாலத்தில் BMW கார் ஒன்று எண்ணெய் கொள்கல லாரியுடன் மோதியதில் நால்வர் காயமடைந்தனர். பாலத்தின் பிரதான நிலப்பகுதியிலிருந்து தீவை நோக்கிச் செல்லும் பாதையில், 3.4ஆவது கிலோமீட்டரில் நள்ளிரவு 12.13 மணியளவில் அவ்விபத்து நிகழ்ந்தது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பே, காரில் இருந்த நால்வரையும் பொதுமக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார். காயமடைந்தவர்களில் ஒருவர் 44 வயது ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற மூவரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. எண்ணெய் கொள்கல லாரியை ஓட்டிய 53 வயது ஓட்டுநர் காயமின்றித் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 12 வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து, இடிபாடுகளை அகற்றி பிற ஆபத்துகள் ஏற்படாமல் உறுதி செய்ததாக John Sagun கூறினார். அதிகாலை 1.11 மணிக்கு மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. அப்பணிகளுக்கு காவல்துறையினரும் PLUS நிறுவன ஊழியர்களும் உதவியதாக அவர் தெரிவித்தார்.



