
கோலாலம்பூர், நவம்பர்-13,
‘பினாங்கு மாநிலம் கெடாவுக்கே சொந்தம்’ என வெடித்துள்ள சர்ச்சை நேற்று மக்களவையிலும் எதிரொலித்தது.
பினாங்கு மாநிலம் கெடா சுல்தானத்தின் சொத்தாக இருக்க வேண்டும் என்பது பின்பற்றப்படவில்லை; எனவே பினாங்கின் வரலாறு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனக் கூறி பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி Tarmizi Sulaiman ‘வாதத்தைத் தொடக்கி வைத்தார்’.
அதற்கு பதிலளித்த பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த புக்கிட் கெளுகோர் உறுப்பினர் ராம் கர்பால் சிங், “கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மாநிலங்களையும், குறிப்பாக பினாங்கை தனி மாநிலமாகவும், அதன் உரிமையை உறுதிப்படுத்துகிறது” என்றார்.
அதோடு, 1786-ஆம் ஆண்டு பிரான்சிஸ் லைட் பினாங்கை ஆக்கிரமித்தது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சியினர் கூறினாலும், வரலாற்று வாதங்களை விட, தற்போதைய சட்டமே முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
அதை ஆமோதித்த ஜெலுத்தோங் எம்.பி RSN. ராயர், “பினாங்கு, கூட்டரசு மலேசியாவின் ஒருபகுதியாகும். எனவே அதன் இறையாண்மைக்கு, கெடா உட்பட யாருமே சவால் விட முடியாது” என திட்டவட்டமாகக் கூற, விவாதம் அனல் பறந்தது.
பினாங்கு மீதான உரிமை தொடர்பில் கெடா அரசு சட்டக்குழுவை அமைத்து வழக்கு தொடரத் தயாராக இருப்பதாக, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் முன்னதாக அறிவித்ததை அடுத்து இவ்விவகாரம் மீண்டும்
சர்ச்சையாகியுள்ளது.
எனினும், சனுசியின் பேச்சுக்கு, “நீதிமன்றத்தில் சந்திப்போம்” என பதிலளித்துள்ளார் பினாங்கு முதல்வர் Chow Kon Yeow.



