Latestமலேசியா

புகைமூட்டத்தால் பள்ளிகளை மூடுவது அந்தந்தப் பகுதியின் நிலைமையைப் பொறுத்தது – ஃபத்லினா

கோலாலம்பூர், அக்-12-புகைமூட்டம் காரணமாகப் பள்ளிகளை மூடுவது தொடர்பான முடிவுகள், அந்தந்தப் பகுதிகளில் நிலவும் காற்றுத் தரம் மற்றும் சூழலைப் பொறுத்து எடுக்கப்படும். கல்வியமைச்சர் Fadhlina Sidek அவ்வாறு கூறியிருக்கிறார்.

பள்ளிகளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு மூடினால், திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனைக் கருத்தில் கொண்டு பள்ளி மூடல் குறித்த அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப மாறுபடுவதால், உள்ளூர் நிலவரத்தைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். புகைமூட்டச் சூழலைக் கையாள்வதில் பல்வேறு அரசாங்கத் துறைகளுக்குப் பொறுப்புகள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் துறை காற்றுத் தரத்தைக் கண்காணித்து வருகிறது. சுகாதாரத் துறை பொதுமக்களுக்குச் சுகாதார அபாயங்கள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகிறது. கல்வியமைச்சு மாணவர்களின் பாதுகாப்பையும் பள்ளிச் செயல்பாடுகளையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது என்றாரவர்.

புகைமூட்டம் காரணமாகப் பள்ளிகள் மூடப்படும் காலங்களில், பாதுகாப்பான சூழலும் நலனும் உறுதி செய்யப்படும் பட்சத்தில், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அங்கேயே தங்கியிருக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பிள்ளைகளைத் திரும்பத் திரும்பப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவதால் பெற்றோருக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும், தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தவும் அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என Fadhlina தெரிவித்தார்.

கல்வியமைச்சின் வழிகாட்டுதலின்படி, API 180-ஐத் தாண்டும் பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட வேண்டும். API அளவு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 150-ஐத் தாண்டும் பகுதிகளில் இன்று முதல் மூடப்படும். பள்ளி மூடல் தொடர்பில் முடிவெடுப்பதை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே விட்டு விடுவதாக கல்வியமைச்சு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!