கோலாலம்பூர், நவம்பர்-19 – கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் சிறுமி ஒருவர் உயிரிழக்கக் காரணமான விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில், 31 வயது அவ்வாடவர் வேகமாக ஓட்டி வந்த BMW 5 Series கார், Honda Beat மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.
அதில் கணவன், மனைவி, 7 வயது மகள் என மோட்டார் சைக்கிளிலிருந்த மூவர் சாலையில் விழுந்தனர்.
காயமடைந்த மூவரையும் பொது மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற வேளை, மகள் சிகிச்சைப் பலனளிக்காது மரணமடைந்தாள்.
மோட்டார் சைக்கிளை மோதி விட்டு சற்று தூரம் தள்ளிச் சென்று நின்ற அக்கார், பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த காட்சிகள் முன்னதாக வைரலான 28 வினாடி வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
கைதான ஆடவர் மீதான விசாரணை முழுமைப் பெற்றதும் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.