கோலாலம்பூர், ஜன 8 – புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள சாலையின் கையிருப்பு நிலப்பகுதியில் கட்டப்பட்டிருந்த சட்டவிரோத கட்டிடங்களை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்கப் பிரிவு தரைமட்டமாக்கியது. இயந்திர பொறியியல் துறை, மின்னியல், நன்னெறி , சுகாதார , சுற்றுச் சூழல்துறை மற்றும் புக்கிட் பிந்தாங் மாநகர் மன்ற கிளை அலுவலகம் ஆகியவற்றின் கூட்டோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலீஸ், தெனாகா நேசனல் பெர்ஹாட், சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனம், அலாம் புளோரா ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட 9 விரிவாக்கப்பட் கட்டுமானப் பகுதிகள் சாலையின் கையிருப்பு நிலம் மற்றும் கால்வாய்களை மூடியநிலையில் இருந்ததால் அவை உடைக்கப்பட்ட வேளையில் இரண்டு நிர்மாணிப்புகளை அவற்றின் உரிமையாளர்கள் அகற்றினர். மேலும் 1974ஆம் ஆண்டின் சாலை , கால்வாய் மற்றும் கட்டிடச் சட்டத்தின் கீழ் பொது இடங்களில் பொருட்களை வைத்த குற்றத்திற்காக பொருட்களை பறிமுதல் செய்யும் ஏழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்தது.