
பேரா, தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை முயற்சி ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
உலகப்பொதுமறையான 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்து மாணவர்கள் மலேசியா சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) தடம் பதித்து அசத்தினர்.
மலேசியாவின் 8 மாநிலங்களைச் சேர்ந்த 1,462 பங்கேற்பாளர்கள் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து இந்த அரிய சாதனை படைத்தனர்.
இதில் 156 தமிழ்ப்பள்ளிகள், 120 தேசிய வகை இடைநிலைப்பள்ளிகள் (SMK), 85 தேசியப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று திருகுறளை ஒப்புவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை தொய்வின்றி அருள் மிகு சமயபுர மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு பேராதரவு வழங்கினர்.
இந்த நிகழ்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக திருக்குறளை ஒப்புவித்ததோடு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வு நம் சமூகம் கொண்டுள்ள ஒற்றுமையையும், அர்ப்பணிப்பையும், எல்லையற்ற அன்பையும் உண்மையாகவே பிரதிபலிக்கிறது என்று தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் செல்வம் கூறினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி, எதிர்கால சந்ததியினர் திருக்குறளின் அழியா வாழ்வியல் நெறிகளைப் போற்றி வளர்க்கவும், நம் நாட்டின் பல்லின கலாச்சார நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தவும் ஒரு பெரும் தூண்டுகோலாக அமையும் என இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விக்னேஸ்வரன் ஐயப்பன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு வருகை அளித்த பேரா ஆட்சிக் குழு உறுப்பினரின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட அவரின் சிறப்பு அதிகாரி உ. முத்துசாமி இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் 20,000ம் ரிங்கிட் வழங்கியதாக அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் எஸ்.பி.புனிதன், பேரா ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் தியாகேஸ் கணேசன், மற்றும் பல பிறமுகர்களும் கலந்துகொண்டனர்.



