
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-16-வரலாற்றுச் சிறப்புமிக்க கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலின் 6-ஆவது மகா கும்பாபிஷேகப் பெருவிழா, இன்று கணபதி பூஜையுடன் பக்திப் பரவசத்துடன் தொடங்கியது.
முழுவதும் கருங்கற்களால் புனரமைக்கப்பட்டுள்ள இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகப் பணிகள் எவ்விதத் தடங்கலுமின்றி இனிதே நடைபெற வேண்டி, முதல் நாள் சிறப்பு வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டன.
இவ்விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகளும், வரும் 10-ஆம் தேதி முதல் யாகசாலை வேள்விகளும் நடைபெறவுள்ளதாக, கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
ஆன்மீக நிகழ்வுகளுடன் ஓதுவார்களின் திருமுறை இசை மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொது மக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பேராதரவுடன் தங்கம், வெள்ளியுடன் ரொக்கமாக மட்டும் இதுவரை 4.7 மில்லியன் ரிங்கிட் நிதி திரட்டப்பட்டுள்ளது.
டத்தோ சிவகுமார் தலைமையிலான இளைஞர் அணியினரும் தேவஸ்தான நிர்வாகத்தினரும் இதன் ஏற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம், அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரையிலான சுப முகூர்த்தத்தில் நடைபெறவுள்ள நிலையில், பக்தர்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கோயில் நிர்வாகம் அன்போடு அழைப்பு விடுத்துள்ளது.



