
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-9 – தாமான் மேடான் PJS 4-ல் புதிதாகக் கட்டப்படவுள்ள பெட்டாலிங் குர்ட்வாரா சாஹிப் (Gurdwara Sahib Petaling Tin) புதிய கட்டடத்திற்கான நிதி திரட்டும் சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சி அண்மையில் சுங்கை வேய் சீன தேசிய மாதிரிப் பள்ளியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ம.இ.கா தேசியத் தலைவரும் முதன்மை சிறப்பு விருந்தினருமான தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த குர்ட்வாரா கட்டுமானப் பணிக்கு ஆதரவளிக்கும் வகையில், ம.இ.கா சார்பில் RM 50,000 நிதியுதவியையும் அவர் வழங்கினார்.
சீக்கிய சமூகத்திற்கும் ம.இ.கா என்றும் உறுதுணையாக இருக்குமென்றார் அவர்.
நிகழ்ச்சியில் பேசிய குர்ட்வாரா தலைவர் Sarindar Singh, முந்தைய குர்ட்வாரா அமைந்திருந்த நிலத்தை அரசாங்கம் பயன்படுத்தவுள்ளதால், அதற்குப் பதிலாக 150 மீட்டர் தொலைவில் 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய நிலத்தை சிலாங்கூர் மாநில அரசு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
சுமார் RM 4 மில்லியன் செலவில் உருவாகவுள்ள இந்த புதிய குர்ட்வாரா கட்டடத் திட்டத்திற்காக, இந்த நிதி திரட்டும் இரவில் மட்டும் RM 1 மில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள RM 3 மில்லியன் நிதியைத் திரட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய Sarinder Singh, எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டுக்காக அமையவுள்ள இந்த புதிய குர்ட்வாரா கட்டுமானப் பணி சிறப்புற அமைய, பொது மக்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு மற்றும் மத்திய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் தலா RM 50,000 நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.



