
ஷா ஆலாம், ஆகஸ்ட்-25-சிலாங்கூர், கிள்ளான், மேருவில் Jalan Persiaran Hamzah Alang எனுமிடத்தில் காவல் துறையின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற ஆடவர் ஒருவர் பிடிபட்டார். 30 வயது மதிக்கத்தக்க அந்த உள்நாட்டவர் நேற்று மாலை 6.10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Ramsay Embol தெரிவித்தார்.
அந்நபர் கறுப்பு நிற Toyota Alphard வாகனத்தை கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச் சென்றுள்ளார். அதோடு அவர் வாகனச் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றதாக Ramsay கூறினார்.
அந்நபரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவருக்கு இதற்கு முன் போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. அவ்வாடவர் ஓட்டிச் சென்ற வாகனம் அவரது பெயரில் பதிவு செய்யப்படாமல், அவருக்கு அறிமுகமான ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றி வாகனத்தை நிறுத்த மறுத்தது, பொது ஊழியர்களின் கடமைக்கு இடையூறாக இருந்தது, சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக அந்நபர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பிடிபட்ட ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனத்திற்கு அருகில், காவல் துறையினர் ஒருவரைக் கைது செய்யும் காட்சி அடங்கிய காணொளியொன்று முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியிருந்தது. அவ்வாகனத்திற்குள் இரு சிறுவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.



