
போர்ட் கிள்ளான், அக்டோபர்-7 – போர்ட் கிள்ளான், ஜாலான் லிம்போங்கானில் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பில், ஆலய நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அவ்வகையில், ECRL எனப்படும் கிழக்குக் கரை இரயில் இணைப்புத் திட்டத்தின் அடுத்தக்கட்ட கட்டுமானப் பகுதியில், தற்போது ஆலயம் அமைந்துள்ள இடமும் இடம்பெறுவதாக மட்டுமே அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாறாக, ஆலயம் இடமாற்றம் செய்யப்படும் என்றோ அல்லது இடிக்கப்படும் என்றோ நோட்டீஸில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என ஆலயத் தலைவர் டாக்டர் முருகா சுப்ரமணியம், வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
அதேவேளையில், ஆலயம் எந்த நிலத்தையும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கவில்லை என்றும், முறையான அனுமதியுடன் செயல்பட்டு வருவதற்கான அனைத்து ஆவணங்களும் நிர்வாகத்திடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, சில தரப்பினர் கருதுவதுபோல் இது அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம் அல்ல என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
தற்போது ஆலயத்தில் வழக்கமான பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் எந்தவிதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நோட்டீஸ் தொடர்பில் ஆலய நிர்வாகம் அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாக்டர் முருகா தெரிவித்தார்.
குறிப்பாக, ECRL திட்டம் அப்பகுதியில் எவ்வாறு செயல்படுத்தப்படும், அதனால் ஆலயத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
எனினும், இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும், இவ்வாண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆலயத்தின் எதிர்காலம் குறித்து பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ள கவலையை நிர்வாகம் புரிந்துகொள்வதாகக் கூறிய Dr முருகா, தற்போதைய நிலையில் பக்தர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றார்.
எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பினர் யாரும் ஆலயத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்றும், ஆலய நிர்வாகமே அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கங்களைப் பக்தர்களும் பொது மக்களும் ஆலய நிர்வாகத்திடமே நேரடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சித்ரா பௌர்ணமி மற்றும் தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்களுக்குப் புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் எதிர்காலம் குறித்து பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ள கவலைகளுக்கு, நிர்வாகத்தின் இந்த விளக்கம் தெளிவை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.



