
ஆயர் குரோ, மே-8-மலாக்காவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Jonker Walk வீதியில், சுற்றுப் பயணி ஒருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறி கைதான 4 சீன நாட்டவர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25-ஆம் தேதி, அங்குள்ள Coconut Shake கடை ஒன்றில் வரிசையில் நின்றிருந்த மற்றொரு சீனப் பயணியிடம் RM7,000 ரொக்கப் பணம் மற்றும் கடன் பற்று அட்டைகள் அடங்கிய பையை இவர்கள் திருடியுள்ளனர்.
நால்வரும் இன்று ஆயர் குரோ மேஜிஸ்திரே நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து அவர்களில் மூவருக்கு தலா RM5,000 அபராதம் அல்லது 4 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றொருவருக்கு 4 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இவர்கள் Guangxi Gang என்ற பெயரில் நெரிசலான இடங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளனர்.
இவர்களில் இருவர் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



