மலேசியத் தேசியக் கல்வி பேரவை மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வு மையம் அமைய வரவேற்பதோடு ஒருமித்த முழுமையான ஆதரவை வழங்குமென உறுதிப்படுத்தியது. அண்மையில் மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியும் சந்தித்ததில் இரு நாடுக்களிக்கிடையிலான நட்புறவையும் பொருளாதார முன்னேற்றத்தையும் மேலோங்கச் செய்யும் என்பதை இச்சந்திப்பு காட்டுகிறது,
அச்சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வு மையம் விரைவில் அமைக்க அறிவிப்பு செய்ததை ஒட்டி 21 ஆகஸ்ட் 2024 செவ்வாய்க்கிழமை அயிட்றாபாட் இல்லத்தில் மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமும் அதற்கு இசைவு தெரிவித்து உறுதிப்படுத்தினார். மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வு மையம் அமைப்பதின் வழி இரு நாடுக்களிக்கிடையிலான கல்வி உறவை மேம்படுத்துவதோடு மலேசியாவில் இந்திய கலை கலாச்சார பண்பாடு நாகரிக வளர்சிக்குப் பெரிதும் துணை புரியும் என நம்பப்படுகிறது
தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகின் மிகச் சிறந்த தத்துவ நூலாகும். கல்வி, நன்னெறி, அரசியல், நல்வாழ்க்கை எனப் பல துறைகளையும் உள்ளடக்கிய அறிவு நூல் என்பதில் கிஞ்சிற்றும் ஈயமில்லை.
மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வு மையம் அமைப்பதின் வழி தமிழ் மட்டுமல்லாது உலகின் பிற மொழிகளிலும் கற்றல், ஆய்வு, கருத்தரங்கு போன்ற பல்வேறு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ள துணை புரியும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். மேலும் தமிழின் தொன்மை, சிறப்பு போன்றவற்றை மலேசிய மக்கள் குறிப்பாக இளைய சமுதாயம் இதன்வழி அறிய வழிவகுக்கும். அதோடு இந்நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் தமிழ் சிறந்த வளர்ச்சி காணும்.
எனவே, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வு மையம் அமைப்பதை மலேசியத் தேசியக் கல்வி பேரவை பெரிதும் வரவேற்பதாக அதன் தலைவர் திரு வெற்றிவேலன் தெரிவித்தார். மேலும் இப்பேரவை அதன் அமைப்பிற்கு தேவையான ஒத்துழைப்பையும் வழங்கும் என நம்பிக்கை கூறினார்.