
கோலாலம்பூர், அக்-27-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள வசதி குறைந்த இந்தியக் குடும்பங்களுக்கு 22,000 மடானி அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கூடைகளை மனிதவள அமைச்சு (KESUMA) வழங்குகிறது. நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் குடும்பங்களின் அன்றாடச் செலவுச் சுமையைக் குறைத்து, அவர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாட உதவுவதே அத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அத்திட்டத்திற்கான பொருட்களை விநியோகிக்கும் வாகன அணிவகுப்பை இன்று தொடங்கி வைத்தார். மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் TalentCorp, PERKESO, HRD Corp, PTPK மற்றும் NIOSH ஆகிய ஐந்து அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தீபாவளி நம்பிக்கை, அன்பு மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மையை எடுத்துரைக்கும் பண்டிகை எனக் குறிப்பிட்ட ரமணன், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவது அவசியம் என்றார். இத்திட்டம் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இன்னும் சிறப்பாக அது கொண்டு செல்லப்படும் என அவர் கூறினார்.
வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய, அமைச்சின் கீழ் உள்ள அமைப்புகள் தங்களது வளங்களையும் பணியாளர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுகின்றன. இந்த மடானி பொருட்கள் கூட உதவித் திட்டம், மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் சமூக நலனில் அமைச்சு கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாக ரமணன் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், கூடைகளைப் பெற்றுக் கொண்ட சிலர் தங்களது மகிழ்ச்சியை இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.
இத்தகைய உதவிகள் வசதி குன்றிய குடும்பங்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதுடன், மலேசியர்களிடையே ஒற்றுமை, கருணை மற்றும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



