Latest

மித்ராவுக்கு இவ்வாண்டு கூடுதலாக RM50 மில்லியன் ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார்

பெட்டாலிங் ஜெயா, மே-10,

மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாண்டு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ்வாண்டுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

இந்தியச் சமூக முன்னேற்றத் திட்டங்களை மித்ரா வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதால், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த கூடுதல் தொகையை அன்வார் அறிவித்தார்.

பட்டப்படிப்பு இந்திய மாணவர்களுடன் இன்று மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தின் அவர் அதனை அறிவித்தார்.

அதே நிகழ்வில் முன்னதாக உரையாற்றிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று, அன்வார் அவ்வறிவிப்பை வெளியிட்டார்.

இதனிடையே இன்றைய அந்நிகழ்வில் 3,000 இந்திய மாணவர்களுக்குப் புதிய மின்னியல் கருவிகள் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் தொடக்கி வைத்தார்.

டிஜிட்டல் கல்வி என்பது ஒரு சலுகை அல்ல, அது அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டிய உரிமை என்றார் அவர்.

தொடர்ந்து, உயர் கல்விக்கூடங்களில் பயிலும் 4,165 மாணவர்களுக்கு, சுமார் 8.35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கல்வி உதவித் தொகையையும் அவர் வழங்கினார்.

மித்ரா மூலம் வழங்கப்பட்ட இந்த உதவி, மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடாமல் இருக்கவும், போட்டி நிறைந்த உலகில் அவர்கள் வெற்றி பெறவும் ஒரு முக்கிய முதலீடாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியச் சமுதாயத்தின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்த அரசாங்கம் எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியே இது எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்காக பிரதமருக்கு நன்றித் தெரிவித்தார்.

SEDIC-கிலிருந்து மித்ராவாக மாறிய வரையில், அதற்கு இதுவே மிகப் பெரிய ஒதுக்கீட்டு என்றார் அவர்.

இந்த கூடுதல் நிதி, இந்தியச் சமூகப் பொருளியல் முன்னேற்றத்திற்காக மேலும் ஏராளமான திட்டங்களை வகுக்க உதவும்.

இது தவிர, பல்வேறு திட்டங்கள் இந்தியத் தொழில்முனைவோர்களுக்காக மடானி அரசு செய்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, மித்ராவின் இவ்வாண்டு திட்டங்கள் குறித்து அதன் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் குறிப்பிட்டார்.

இன்றைய நிகழ்வில் பிரதமரிடமிருந்து உதவிப் பெற்ற மாணவர்களும் தங்களின் மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.

பல்கலைக் கழக மாணவர்களுடனான இந்தக் கலந்துரையால் நிகழ்ச்சியில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!