
வெனிசுலா, ஜூன் 25: வெனிசுலாவில் (Venezuela) ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் குறைந்தது 32 பேர் உயிரிழந்ததுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, கராகஸின் (Caracas) மேற்குப் பகுதியில் முதலில் 7.2 ரிக்டர் அளவிலும், ஒரு நிமிடத்திற்குள் 7.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவாகின.
நிலநடுக்கத்தால் தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இடைக்கால அதிபர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதுடன், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஜப்பானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இவாத்தே (Iwate) கடற்கரைக்கு அருகே இன்று காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், அதனால் பெரிய அளவிலான சேதமோ உயிரிழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



