
கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- ‘2030 இந்திய முஸ்லிம் மாற்றத்திற்கான கட்டமைப்பு’ திட்டத்திற்கான தேசிய அளவிலான தளமாக ‘MUKMIN Skills’ தொடங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு, TVET எனும் தொழில்நுட்பக் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி, வேலை வாய்ப்புத் திறன் மற்றும் வாழ்நாள் கற்றல் ஆகியவற்றை இத்திட்டம் முன்னெடுத்துச் செல்கிறது.
உயர்க்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abdul Kadir, துணைப் பிரதமரும், கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சரும், தேசிய TVET கவுன்சிலின் தலைவருமான Dato’ Seri Dr Ahmad Zahid Hamidiயின் உரையை வாசித்து பின் இந்நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.

செயற்கை நுண்ணறிவான AI, தானியக்கம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவை உலகப் பொருளாதாரத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில், எதிர்காலத் தேவைக்கேற்ற மற்றும் உயர் திறன் கொண்ட மனிதவளம், உற்பத்தித் திறன், போட்டித்தன்மை மற்றும் நீண்ட கால செழிப்பு ஆகியவற்றின் முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது.
தொழில்துறையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க கல்வி மட்டுமே போதுமானதல்ல. எனவேதான் ‘MUKMIN Skills’ உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு 2030-ஆம் ஆண்டிற்குள் 250 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருளாதாரத்தை உருவாக்குவதில் சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான இலக்கையும் அத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
மலேசியாவில், உயர்கல்வி தகுதி பெற்ற 1.96 மில்லியன் மலேசியர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்றதல்லாத அல்லது திறன்களுக்குக் குறைவான வேலைகளில் இருப்பதை மலேசிய புள்ளி விவரத்துறையின் பதிவுகள் காட்டுகின்றன. இது எதிர்காலப் பொருளாதாரத்திற்குத் தேவையான திறன்களுடன் மனித வளத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக Ahmad Zahid தமதுரையில் குறிப்பிட்டார்.
‘MUKMIN Skills’ ஆறு முக்கிய உத்திசார் துறைகளில் கவனம் செலுத்துகிறது. தொழில் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறைச் சான்றிதழ்கள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சி, AI, டிஜிட்டல் மற்றும் எதிர்காலத் திறன்கள், தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் திறன், தொழில்முனைவு மற்றும் வாழ்நாள் கற்றல் அவையாகும்.
இந்நிகழ்வில் MUKMIN Skills – MIMOS Academy, Microsoft மற்றும் Qualitas Health ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே துறைசார் கூட்டு முயற்சிகளும் அறிவிக்கப்பட்டன.
இதனிடையே நேற்று The Arch Galleryயில் நடைபெற்ற இவ்விழாவில் MUKMIN தலைவர் Datuk Wira Shahul Dawood, திறன்களை இனி வெறும் கல்விக்கான ஒரு துணை அங்கமாக மட்டும் பார்க்கக்கூடாது. மாறாக நாட்டின் பொருளாதார எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய முதலீடாகவே கருத வேண்டும் என வணக்கம் மலேசியாவிடம் குறிப்பிட்டார்.
MUKMIN மலேசியாவின் மிகப்பெரிய குடை அமைப்பாகும். இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஒன்றுபட்ட குரலாக நாடு முழுவதும் 120 க்கும் மேற்பட்ட அமைப்புகளை உள்ளடக்கியதாக இது விளங்குகிறது.



