
கோலாலம்பூர், நவ 12-தமிழ் ஊடகத்துறையில் பணியாற்றியபோது உயிரிழந்த மற்றும் உடல்நலப் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு PERKESO i-LINDUNG u திட்டத்தின் கீழ் ஆதரவு வழங்கப்பட்டது. Renaissance ஹோட்டலில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஊடக விருது மற்றும் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அந்த அங்கீகாரங்களை வழங்கினார்.
அதில், மறைந்த மக்கள் ஓசை நாளிதழின் முன்னாள் மூத்த ஆசிரியர் டாக்டர் ராஜன் பூபாலன் மற்றும் பணியிடத்திலேயே உயிரிழந்த யோகேஸ்வரன் அழகன் ஆகியோரின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது. மேலும், மக்கள் ஓசையின் முன்னாள் மனிதவள நிர்வாகி இந்திரதவி கலாமேலுவுக்கு இயலாமை ஓய்வூதியம் மற்றும் தொடர் பராமரிப்பு உதவித்தொகை பெறுகிறார்.
அந்நிகழ்வில், ஐந்து பிரிவுகளில் போட்டியிட்ட 16 வெற்றியாளர்களுக்கு PERKESO i-LINDUNG ஊடக விருதுகளும் வழங்கப்பட்டன. மிக உயரிய KESUMA PERKESO தங்க விருதை, New Straits Times ஊடகத்தின் Intan Maizura Ahmad Kamal எழுதிய “The Man Who Comes Knocking” என்ற கட்டுரை வென்றது. PERKESO Prihatin களப்பணிகளையும், அவை மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் எடுத்துரைத்ததற்காக அவ்விருது வழங்கப்பட்டது.
தொலைக்காட்சி மற்றும் காணொளி, வானொலி மற்றும் Podcast, அச்சு ஊடகம், இணையத்தளச் செய்தி, புகைப்படம் ஆகிய பிரிவுகளிலும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் National FMமின் பரந்தாமன் நடராஜன் சிறந்த வானொலி மற்றும் Podcast அறிக்கைப் பிரிவில் முதலிடம் பெற்றார். Astro Audio Newsசின் Muhammad Najib Md Nazri இரண்டாம் இடத்தைப் பிடித்த வேளை BFM Media மூன்றாம் இடத்தை வென்றது.
அந்நிகழ்வில் உரையாற்றிய ரமணன், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகவியலாளர்கள் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், i-LINDUNG ஊடக விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டைவிட 66 விழுக்காடு அதிகரித்திருப்பது, சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் ரமணன் தெரிவித்தார்.



