
பேங்கோக், ஜூன்-26 – தாய்லாந்து, பேங்கோக்கை வாட்டும் வெப்பக் குறியீடு 51.9 பாகை செல்சியஸை எட்டியுள்ளதால், தலைநகரம் தற்போது ‘ஆபத்தான’ கட்டத்தில் இருப்பதாக அந்நாட்டரசு எச்சரித்துள்ளது.
இதையடுத்து, மக்கள் மதிய வேளையில், குறிப்பாக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை, தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு தாய்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் வானிலை ஆய்வுத் துறைகள் வலியுறுத்தியுள்ளன.
அதோடு, கடுமையான வெப்ப பக்கவாதத்திலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், நகரம் முழுவதும் அவசர ‘குளிர்விப்பு மையங்களை’ (Cooling Shelters) அரசு திறந்துள்ளது.
குறிப்பாக, சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நாட்பட்ட நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், உணவு அனுப்பும் ஊழியர்கள் போன்ற வெளியில் வேலை செய்பவர்கள் இந்த வெப்ப அலையினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய உயர் ஆபத்துப் பிரிவினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மயக்கம், தலைச்சுற்றல் மற்றும் உடலில் தடிப்புகள் போன்ற வெப்ப அழுத்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அவசர மருத்துவ உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தாய்லாந்து அரசு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.



