
கோலாலம்பூர், ஜூன்-26-மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026 சிறைச்சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நேற்று கடும் வாக்குவாதமாக வெடித்தது.
இந்த மசோதாவில் உள்ள சர்ச்சைக்குரிய புதிய பிரிவு ஒன்றை, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக சாடினர்.
முன்மொழியப்பட்டுள்ள 63A எனப்படும் புதியப் பிரிவானது, சிறைச்சாலை அதிகாரிகள் நல்நோக்கத்துடன் செய்யும் செயல்களுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பை வழங்க முயல்கிறது.
இதற்கு கடுமையான மனித உரிமை கவலைகளை எழுப்பியுள்ள ராயர், இதுபோன்ற விரிவான சட்டவிலக்குகள் சிறைகளுக்குள் மனிதநேயமற்ற நடத்தைகளுக்கு வழிவகுக்கும் என்றும், அதிகாரிகளின் கடுமையான அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அலட்சியப் போக்குகள் நீதிமன்றங்களின் கவனத்திற்கு வராமல் போகுமென்றும் எச்சரித்தார்.
இவ்வாண்டு ஜனவரியில் தைப்பிங் சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணமடைந்த சம்பவம் குறித்த மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையைச் சுட்டிக் காட்டிய ராயர், மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்தாண்டு இறுதியில் 3 இந்தியர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் மேற்கோள் காட்டினார்.
குறிப்பாக, மலாக்கா சம்பவத்தில் இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
நிலைமை இப்படி இருக்க, அதிகாரிகளுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்க முடிவுச் செய்தால், அதிகார துஷ்பிரயோக சம்பவங்களுக்கு முடிவில்லாமல் போய்விடும் என்றார் அவர்.
ராயர் உள்ளிட்ட எம்.பிக்களின் கடும் எதிர்ப்பு வீண்போகவில்லை;
அவற்றுக்கு செவிசாய்த்த அரசாங்கம், இந்த மசோதா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற சிறப்புத் தெரிவுக்குழுவின் விரிவான ஆய்வுக்கு இது அனுப்பப்படும் என்றும் அறிவித்துள்ளது.



