கோலாலம்பூர், மே.10 – மின்னியல் ஊடகங்களில் எழுதும் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இணையும் வகையில், சங்கத்தின் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று சங்கத்தின் புதிய தலைவர் திரு.மோகனன் பெருமாள் அறிவித்தார்.
கடந்த 1962 ஆம் தொடங்கப்பட்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அன்றைய தேவைக்கு ஏற்ப சட்டத்தை உருவாக்கி இருந்தது. கால மாறுதல்களுக்கு ஏற்ப சங்கத்தின் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியமாகிறது என்று தனது முதல் தலைவர் உரையில் மோகனன் குறிப்பிட்டார்.
அவர் தமதுரையில், ‘1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட் சங்கம், கடந்த 61 ஆண்டாக அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப சிறப்பான முறையில் செயல்பட்டு வந்துள்ளது. அந்த நீண்ட நெடிய பயணம் வெற்றிகரமாக அமைய சங்கத்தின் நிர்வாகம் கால மாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது சட்டத்தில் திருத்தம் செய்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றைய சூழலில் எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை நாளிதழ்கள், சஞ்சிகைகளில் மட்டுமே வெளியிட முடியும். அதனால்தான், அச்சில் வந்த ஒரு படைப்பை, உறுப்பினர் மனுப்பாரத்துடன் இணைக்க வேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில், இளைய தலைமுறையினர் அச்சு ஊடகங்களை வாசிப்பதும் அதற்கு எழுதுவதும், பெருமளவில் குறைந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
அவர்கள் மின்னியல் ஊடகங்களில் தங்களின் இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆளுமைகளாக வளர்ந்து இருக்கிறார்கள். உலகளவில் கூட அறிமுகமாகி இருக்கிறார்கள். அந்த இளைய தலைமுறையினரையும் சங்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
அச்சு ஊடகங்களில் வந்த படைப்புகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்வதைப் போலவே மின்னியல் ஊடகங்களில் வந்த கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் ஆகிய படைப்புகளையும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும்.’
உயர்க்கல்வி மாணவர்களை நோக்கி.
அதேபோல உயர்க்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டுவதை ஊக்குவிக்கவும், அவர்கள் சங்கத்தோடும் இணைந்து பயணிக்க வைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ் படித்த இளைய தலைமுறையினர், உயர்க்கல்விக் கூடங்களுக்குச் சென்றதும், அவர்களின் துறைசார்ந்த படிப்பில் கவனம் செலுத்தி, காலப்போக்கில் தமிழ்மொழி, படைப்பிலக்கியம் ஆகியவற்றோடு தொடர்பற்றுப் போய் விடுகிறார்கள்.
அவர்களைத் தமிழோடு இணைத்து வைக்கவும் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைக்கவும் தற்போதுள்ள ஆயுள் சந்தாவில் சட்டத் திருத்தம் செய்யப்படும்.
உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட மாணவர்கள், அவர்களின் கல்விக்கூடங்களின் உறுதிக் கடிதம் அல்லது கல்விக்கூடத்தின் அடையாள அட்டையுடன் மனுச் செய்தால் அவர்களின் ஆயுள் சந்தாவை RM 100.00 ஆக நிர்ணயிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று மோகனன் விவரித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக செயலவை உறுப்பினர், நிர்வாகச் செயலாளர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்ற பின்னர் இவ்வாண்டு போட்டியின்றி தலைவராக வெற்றி பெற்ற மோகனன் முன்வைத்த உத்தேச சட்டத் திருத்த தீர்மானத்தை பேராளர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள். பொது வாழ்க்கையில் நீண்டகால அனுபவம் உள்ள திரு. ந.கு.முல்லைச்செல்வன் சட்டத்திருத்தக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
மின்னியல் துறைத் திறனாளிகள், கல்விமான்கள், படைப்பாளர்கள், சங்கப் பதிவிலாக்கா அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய கருத்தாய்வு சந்திப்பு ஒன்றிணை நடத்திய பின்னர், முழுமையான சட்டத்திருத்த மசோதா தயாரிக்கப்படும். முழுமையான அந்தச் சட்ட மசோதா, அடுத்தாண்டுப் பொதுக்கூட்டத்தில் தாக்கல் செய்து அங்கீகாரம் பெறப்படும் என்று அவர் விவரித்தார்.