
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-06- தமது முன்னாள் காதலருடனான உறவை முடித்துக் கொண்டது, தாதி ஒருவருக்கு ஆபத்தாஜ முடிந்துள்ளது. தமது அந்த 27 வயதான வேலையற்ற முன்னாள் காதலர் போதைப்பொருள் பயன்படுத்துவதை அறிந்ததும் அவர் அவ்வாறு செய்துள்ளார்.
எனினும் அந்நபர் தம்மைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தங்களுக்கு இடையிலான அந்தரங்க காணொளிகளை இணையத்தில் பரப்பி விடுவதாக மருட்டியதாகவும் சிங்கப்பூரில் பணி புரியும் Nini என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த 29 வயது தாதி கூறினார்.
அந்நபர் வேலையில்லாதவர் மற்றும் போதைப்பொருள் பழக்கம் கொண்டவர் என்பது தெரிந்திருந்தும், மீண்டும் சேருமாறு அவரது தாயார் உட்பட அவரது குடும்பத்தினர் கூறினர்.
மேலும், தாம் ஒரு ரகசியக் குழுவின் உறுப்பினர் என்று கூறி, தமது நண்பர்களை அழைத்து வந்து தாக்கவிருப்பதாகவும் அந்நபர் கூறியதாக Nini குறிப்பிட்டார்.
அதனை அடுத்து தமது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்த Nini, கடந்த ஜூலை 9 ஆம் தேதி தென் ஜோகூர் பாரு மாவட்டக் காவல் தலைமையகத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையின் விசாரணையின் போது, தமது கைப்பேசியில் இருந்த அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அழித்து விட்டதாக அந்நபர் கூறினார். எனவே தாம் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக Nini தெரிவித்தார்.
ஆயினும் அதன் பிறகு துன்புறுத்தல் தொடர்ந்தது. அந்தரங்கப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பி அவதூறான கருத்துகளை அவர் பதிவிட்டார்.
தொடர்ந்து மருட்டி வந்ததாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்தரங்க புகைப்படங்களையும் காணொளிகளையும் அனுப்பியதாலும் அவருக்கு எதிராக மீண்டும் புகார் கொடுத்ததாகவும் ஆயினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் Kota Puteriயில் உள்ள TLK குழுவின் புகார் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Nini குறிப்பிட்டார்.
இவ்வேளையில், காவல்துறை அது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என TLK புகார்ப் பிரிவுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.



