
இஸ்கண்டார் புத்ரி, அக்டோபர்-22 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் நூசா பெஸ்தாரியில் வீட்டில் சட்டவிரோதமாக ‘black jack’ சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 19 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர்.
அவர்களில் 10 பேர் பெண்களாவர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட Ops Dadu சோதனை நடவடிக்கையில், தொழிற்சாலை ஊழியர்கள், உணவகப் பணியாளர்கள், மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களான அவர்கள் போலீசிடம் சிக்கினர்.
சூதாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வந்த ஒரு காதல் ஜோடியும் அந்த 19 பேரில் அடங்குமென, இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ACP எம். குமரேசன் தெரிவித்தார்.
சோதனையின் போது போலீசிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் வீட்டின் பின்பக்கக் கண்ணாடியில் ஏறிக் குதித்த சூதாட்ட கும்பலின் தலைவனுக்கு, இடது கணுக்கால் எலும்பு முறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அக்கும்பலிடமிருந்து ஏராளமான சீட்டுக் கட்டுகளும், சூதாட்டப் பணம் என நம்பப்படும் 52,808 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான சிலருக்கு முறையான வேலை பெர்மிட் இல்லையென்பதும் கண்டறியப்பட்டது.