
மெல்பர்ன், அக் 28 – மெல்பர்னில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன், அரங்கு நிறைந்த திரையிடலாக அமைந்தது மலேசியத் தமிழ்த் திரைப்படமான ‘இரும்புத் தோட்டம்’. ஆஸ்திரேலியாவின் பொதுத் திரையரங்கில் வெளியான இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, மலேசியத் தமிழ் சினிமாவின் அனைத்துலகப் பயணத்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ஜெய்தேவ் ஜெயகுமார் இயக்கத்தில், AVLT Production தயாரித்துள்ள இப்படம், ஆஸ்திரேலியாவில் பொதுத் திரையரங்கில் வெளியான முதல் மலேசியத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
குற்ற விசாரணையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, மெல்பர்னிலுள்ள Thornbury Picture House திரையரங்கில் இரவு 8.15 மணிக்குத் திரையிடப்பட்டது. Elevate Pro Services நிறுவனம் இப்படத்தை அங்கு வெளியிட்டது.
இத்திரையிடலில், மெல்பர்னிலுள்ள மலேசியத் துணைத் தூதரகத்தைச் சேர்ந்த நிக் முஹம்மது நஸ்ரோன் ஷா நிக் டாவுட் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு ரசித்தார். படத்தைப் பாராட்டிய அவர், தனது கருத்துகளை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.
இத்திரையிடலுக்கு இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, மெல்பர்னில் வசிக்கும் மலாய், சீன சமூகத்தினரும் ஆதரவு அளித்திருந்தனர்.
படத்தைக் கண்டு ரசித்த ரசிகர்கள், அது தங்களைக் கவர்ந்ததாகத் தெரிவித்ததுடன், தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்திற்கு மெல்பர்னில் கிடைத்துள்ள இந்த வரவேற்பு, உள்ளூர் கலைஞர்களுக்கு ஊக்கமளித்துள்ளது.
இந்த முயற்சி, மேலும் பல மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் அனைத்துலக ரசிகர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.



