
ஜோகூர் பாரு, ஜூலை.09- ஜோகூரின் வளர்ச்சிப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. கடந்த சில ஆண்டுகளில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல தொடர்ச்சியான தலைமைத்துவமும் மக்களின் நம்பிக்கையும் அவசியம்.
“எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு அளியுங்கள். ஜோகூரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன்.”
இவ்வாறு, ஜோகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னிட்டு, மந்திரி பெசாரும் தேசிய முன்னணியின் மாநிலத் தலைவருமான ஒன் ஹஃபிஸ் காஸி, மக்களிடம், குறிப்பாக இந்தியச் சமூகத்தினரிடம் உணர்வுப்பூர்வ வேண்டுகோளை விடுத்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜோகூர் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, முதலீடு, வேலைவாய்ப்பு, கல்வி, மக்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டிலேயே அதிகபட்சமான எட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை ஜோகூர் பதிவு செய்ததோடு, RM110 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளையும் ஈர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதுடன், அவற்றில் சுமார் 9,000 வேலைகள் உயர்ந்த ஊதியம் வழங்கும் பணிகளாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, மாநில அரசின் வருவாய் RM2.6 பில்லியனாக உயர்ந்திருப்பதாகவும், அந்த வருவாய் கல்வி, மக்கள் நலத் திட்டங்கள், அடிப்படை வசதிகள், சாலை மேம்பாடு, பொதுச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஜோகூரின் அனைத்து மாவட்டங்களுக்கும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய முன்னணி ஒருபோதும் இனவாத அரசியலை கடைப்பிடிக்கவில்லை என்றும், தாமும் இனவாத சிந்தனையுடைய தலைவர் அல்ல என்றும் ஒன் ஹஃபிஸ் வலியுறுத்தினார்.
இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை ஆலயங்கள், கல்வி, மக்கள் நலன், இறப்புச் சடங்கு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். எதிர்காலத்தில் இதைவிட அதிகமாக செய்ய உறுதியளிக்கிறோம்,” என்றார் .
ஜோகூரில் இந்தியர்கள் பெரும்பான்மை வாக்காளர்கள் இல்லாவிட்டாலும், கடுமையான போட்டி நிலவும் பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக அவர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, தேசிய முன்னணிக்கு இந்தியச் சமூகம் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என ஒன் ஹஃபிஸ் கேட்டுக்கொண்டார்.
“மிகுந்த தாழ்மையுடன் இந்தியச் சமூகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எனது தலைமைத்துவத்திற்கும் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கும் மீண்டும் ஆதரவு அளியுங்கள். எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு வழங்குங்கள். மக்களின் நம்பிக்கையை எனது செயல்பாட்டின் மூலம் நிச்சயமாக நிரூபிப்பேன்,” என்றார் அவர்.



