
கோலாலம்பூர், செப் 23 – உலகளாவிய இந்திய வம்சாவளியினரின் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், வர்த்தகம், கல்வி மற்றும் இளைஞர் தலைமைத்துவத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், 16ஆவது GOPIO அனைத்துலக மாநாடு மொரீஷியஸில் நடைபெற்றது.
செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்ற இம்மாநாட்டில், 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் பங்கேற்றனர்.



GOPIO Malaysia மற்றும் GOPIO International இணைந்து ஏற்பாடு செய்த இம்மாநாட்டில், இந்திய வம்சாவளித் தலைவர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர்.
குறிப்பாக, மொரீஷியஸை உலக இந்திய வம்சாவளியினரின் முக்கிய மையமாக உருவாக்குவது தொடர்பில், அந்நாட்டுப் பிரதமர் மற்றும் அதிபருடன் முக்கியக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
மொரீஷியஸில் GOPIO International தலைமையகத்தை நிறுவுதல், இந்திய வம்சாவளியினருக்கான சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அனைத்துலக இளைஞர் மாநாட்டை நடத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இந்த மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து GOPIO International செயலாளர் ரவீந்திரன் அர்ஜுனன் பகிர்ந்துக் கொண்டார்.
இதனிடையே, இந்திய வம்சாவளியினரின் முன்னேற்றத்திற்கான தலைமைத்துவப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மொரீஷியஸ் குடியரசுத் தலைவருக்கு GOPIO International சார்பில் ‘Excellence Award for Leadership’ விருது வழங்கப்பட்டது.
மலேசியாவுக்கான மொரீஷியஸ் உயர் ஆணையர் ராபின் குங்கூவின் ஆதரவுடன் நடைபெற்ற இம்மாநாடு, உலக இந்திய வம்சாவளியினரிடையே புதிய அனைத்துலகப் பங்காளித்துவங்கள், வர்த்தக வாய்ப்புகள் மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவதற்கான தளமாக அமைந்தது.



