
நரேந்திர மோடியும் பாஜகவும் ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவுக்குத் திரும்பமாட்டேன் என சமய போதகர் ஜாகிர் நாயக் கூறியதாக இந்தியத் தொலைக்காட்சி நிறுவனமான ரிபப்ளிக் டிவி தெரிவித்துள்ளது.
மலேசியாவில் தங்கியிருக்கும் ஜாகிர் நாயக்கை, சந்தித்துப் பேசியதாகக் கூறும் ரிபப்ளிக் டிவி, அவருக்கே தெரியாமல் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலின் காணொளியையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்குத் திரும்பினால், அங்கிருந்து வெளியே வர முடியாது என அவர் பேசிய வீடியோ அச்செய்தியில் காண்பிக்கப்பட்டது .
அதே உரையாடலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியைவிட “சிறந்தவர்” என்றும் ஜாகிர் நாயக் கூறியதாக ரிபப்ளிக் டிவி தெரிவித்துள்ளது. புத்ராஜெயாவில் உள்ள Tamara அடுக்குமாடி குடியிருப்பில் அவர் இரண்டு மெய்க்காப்பாளர்களுடன் இருப்பதாகவும் அந்தத் தொலைக்காட்சி கூறுகிறது.
ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா முன்பே மலேசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் இருநாட்டு உயர்மட்டப் பேச்சுகளிலும் இடம்பெற்றுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அவருக்கான நிதி ஆதாரம் யார், மலேசியாவில் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது யார் என்ற கேள்விகளையும் ரிபப்ளிக் டிவி தனது விவாத நிகழ்ச்சியில் எழுப்பியுள்ளது.
இந்தியாவில் ஜாகிர் நாயக் மீது பணமோசடி மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மட்டுமே என அவர் முன்பு கூறியுள்ளார். ரிபப்ளிக் டிவி வெளியிட்ட தகவல்களும், ரகசியப் பதிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கருத்துகளும் சுயேட்சை தரப்பால் உறுதிப்படுத்தப்படவில்லை.



