
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-16,சுங்கைவே தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ம.இ.கா மூத்த தலைவருமான டத்தோ வி.எல். காந்தன் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 89.இவர், ம.இ.காவின் ஆறாவது தேசியத் தலைவர் மறைந்த தான் ஸ்ரீ வி. மாணிக்கவாசகத்தின் இளையச் சகோதரர் ஆவர்.
டத்தோ காந்தன், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக அரசியலில் உச்சம் தொட்டு, ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர், மத்திய செயலவை உறுப்பினர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.
சட்டத்துறை மற்றும் அரசியலில் முத்திரை பதித்த இவர், சமுதாயப் பணிகளுக்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
குறிப்பாக, பூச்சோங் சுத்த சமாஜம், Dr ராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவை வாயிலாக அவர் சமூக – இலக்கியச் சேவையும் ஆற்றியுள்ளார்.
அன்னாருக்கு, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 1 மணி முதல் பொது மக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
வியாழக்கிழமை காலை இறுதிச் சடங்குகள் நடைபெற்று, பிற்பகல் 2 மணிக்குச் செக்ஷன் 51-ல் அமைந்துள்ள கம்போங் துங்கு மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.



