Latest

‘யதார்த்தத்திற்குப் எதிரானது’: சிலாங்கூர் அரசின் 5000 குடியிருப்பாளர்கள், உயர கட்டுப்பாடு, வணிக வளாக பகுதிகளில் முடியாது எனும் புதிய வழிபாட்டுத் தல வழிகாட்டுதல்களுக்கு மத நல்லிணக்கக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

கோலாலம்பூர் ஜூன்-11-சிலாங்கூர் மாநில அரசு, முஸ்லீம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்காக அறிவித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முற்றிலும் யதார்த்தத்திற்கு எதிரானவை எனக் கூறி, நாட்டின் முக்கிய மத நல்லிணக்கக் கூட்டமைப்பு அதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவுச் செய்துள்ளது.

​பௌத்தம், கிறிஸ்துவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகிய மதங்களைப் பிரதிநிதிதிக்கும் ஆலோசக மன்றமான MCCBCHST வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட வேண்டுமானால், அங்கு அந்த மதத்தைச் சேர்ந்த 5,000 குடியிருப்புவாசிகள் அல்லது 1,250 வீடுகள் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை சிறுபான்மைச் சமூகங்களின் நிலையை உதாசீனப்படுத்துவதாகக் கூறியுள்ளது.

5,000 பேருக்கு பதிலாக 1,500 பேர் அல்லது 375 வீடுகள் என அது குறைக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்களுக்கான நில ஒதுக்கீடு 1.5 ஏக்கராக நிலைநிறுத்தப்பட வேண்டுமென அம்மன்றம் பரிந்துரைத்துள்ளது.

தவிர, வணிக வளாகங்களில் வழிபாட்டுத் தலங்கள் செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடையையும் அது கடுமையாக விமர்ச்சித்துள்ளது.

​அரிய மற்றும் விலையுயர்ந்த நிலங்களை வாங்க முடியாத சிறிய அளவிலான மதக் குழுக்களுக்கு இந்த வணிகக் கடைகளே ஒரே வாழ்வாதாரமாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அக்குழு, இப்புதிய கட்டுப்பாடுகள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மத சுதந்திர உரிமைக்கு எதிரானது என எச்சரித்துள்ளது.

மேலும், முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் உயரம் 72 அடியை அல்லது அதே பகுதியில் அல்லது அதற்கு அருகிலுள்ள பகுதியில் உள்ள ஒரு மசூதியின் உயரத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது எனக் குறிப்பிடும் உயர நிபந்தனை குறித்தும் அது கவலைத் தெரிவித்தது.

​சிலாங்கூர் சமூக வசதிகளுக்கான திட்டமிடல் வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் 2025-ஐ தயாரிக்கும் போது, சிலாங்கூர் மாநில அரசு தங்களைக் கலந்தாலோசிக்கவில்லை என்றும் அம்மன்றம் தெளிவுப்படுத்தியது.

எனவே, சிலாங்கூர் மாநில அரசு இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக நிறுத்தி வைத்து, அனைத்து மதத் தலைவர்களுடனும் அவசரக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என அம்மன்றம் வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!