
அம்பாங், ஜூலை-23-தமது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் Corporal அந்தஸ்தைக் கொண்ட காவல் அதிகாரி இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டார்.
அம்பாங் sessions நீதிமன்ற நீதிபதி Norshila Kamarudin முன்னிலையில் தம் மீது கொண்டு வரப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை அந்த 35 வயது காவல் அதிகாரி மறுத்து விசாரணை கோரினார்.
தனது 18 வயது மூத்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கு ஒன்றின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அந்நபர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மற்றொரு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ரவாங்கில் Kuala Kubu Bharuவில் உள்ள ஒரு வீட்டில் அக்குற்றங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.
அந்நபர் தற்போது மனநல மருத்துவ சிகிச்சையில் இருப்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அவரைப் பிணையில் விடுவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே Kuala Kubu Bharu நீதிமன்றத்தில், தனது மூத்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
அவ்வழக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



