
சென்னை, ஜூலை-9 – தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா எனும் இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே போன்று மற்றொரு துயரம் அம்பலமாகியுள்ளது.
திருமணமான நான்கே மாதங்களில் கவிதா என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர், மறைந்த பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப் பேத்தியாவார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கவிதாவுக்கும், இராணுவத்தில் மேஜர் பதவியில் மருத்துவராக உள்ள நாகார்ஜூன் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
மாப்பிள்ளை ‘பெரிய’ இடமென்பதால் எக்கச்சக்கமான வரதட்சணை கொடுத்து, திருமணத்தை பெண் வீட்டாரே நடத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜூன் 10- ஆம் தேதி கவிதாவின் தந்தையை கைப்பேசியில் திடீரென அழைத்த மாப்பிள்ளை வீட்டார், கவிதா மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடுவதாகக் கூறி அதிர வைத்தனர்.
விமானத்தில் மூலம் இராணுவ மருத்துவமனக்குச் சென்று பார்த்த போது மகள் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
பிறகும் இறந்தும் போனார்.
கவிதாவின் உடலை, மாப்பிள்ளை வீட்டாரே பிரேத பரிசோதனை முடித்து சென்னை கொண்டு வந்து கவிதாவின் வீட்டு முறைப்படி இறுதிச் சடங்குகளும் நடைபெற்றன.
தொடர்ந்து ஒரு வாரம் கவிதாவின் வீட்டிலேயே மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்தனர்; ஆனால் கவிதாவின் இறப்பின் போதும் அதற்குப் பிறகும் அவர்கள் முகத்தில் எவ்வித துயரமும் துக்கமும் வெளிப்படவில்லை.
இது கவிதா வீட்டாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
நாகார்ஜூனா தனியாக மருத்துவனைக் கட்ட இடம் வாங்கித் தரச் சொல்லி கவிதாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அக்குடும்பம் துன்புறுத்தியிருக்கக் கூடும்.
இதன் காரணமாகவே கவிதா மர்மமான முறையில் மரணமடைந்ததாக சந்தேகம் கொண்ட அவரின் தந்தை, போலீஸில் புகார் செய்து மகளின் மரணத்திற்கு நீதி கேட்கிறார்.
மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையால் ரிதன்யாவின் உயிர் போன நிலையில், இன்னொரு பெண்ணின் உயிரும் பறிபோயிருப்பது தமிழகத்தில் வரதட்சணை கொடுமை மீண்டும் தலைத்தூக்கியிருப்பதை காட்டுகிறது.