’ரூமா மெஸ்ரா ராக்யா’ வீடுகளுக்கு கிளந்தான், திரங்கானுவில் அதிக விண்ணப்பங்கள்

கெர்த்தே, செப்டம்பர்-30,
இவ்வாண்டு நாடு முழுவதும் மொத்தம் 5,450 ‘ரூமா மெஸ்ரா ரக்யாட்’ அல்லது RMR வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.
இதற்கு RM504 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வீடமைப்பு – ஊராட்சித் துறை துணையமைச்சர் டத்தோ Aiman Athirah Sabu தெரிவித்தார்.
ஆகஸ்ட் 31 நிலவரப்படி 1,310 வீடுகள் கட்டுமானத்தில் இருந்தன; 2,766 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.
மேலும் 1,374 வீடுகள் குத்தகைகாரர்களிடம் ஒப்படைக்கப்படும் பணியிலிருக்கின்றன.
இதில் அரசாங்கம் வழங்கும் மானியம் RM20,000 ஆகும்; மீதமுள்ள RM55,000 மட்டுமே விண்ணப்பதாரர் கட்ட வேண்டியிருக்கும்; அது கூட தேசிய வீடமைப்பு நிறுவனமான SPNB-யுடனான வட்டியில்லா கடன் மூலம் அவர்கள் செலுத்தலாம்.
திரங்கானு, கெர்த்தேவில் இன்று நடைபெற்ற RMR வீடுகளுக்கான சாவி ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
இந்த RMR வீடுகளுக்கு, கிளந்தானில் தான் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன; அங்கு 11,000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளை, அதற்கடுத்து திரங்கானுவில் 10,200 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்களுக்கான முக்கியத் தேவைகளாக, குறைந்த வருமானக் பெறுவோர், அதாவது RM5,000 மற்றும் அதற்குக் குறைவானவர்களாக இருக்க வேண்டும்; தவிர சொந்தமாக வீடு வைத்திருக்கவோ அல்லது பாழடைந்த வீட்டில் வசிக்கவோ கூடாது; அதோடு மேம்படுத்தக்கூடிய நிலத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
திருமணமான ஆனால் இன்னும் சொந்த வீடு இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



