
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – தனக்கு கிடைத்த லாட்டரி எண்கள் தொடர்பான அதிருப்தியில், 62 வயதான லாட்டரி கடை பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 59 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்துவரும் போலீசார், இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட பகையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் (Fadil Marsus) கூறுகையில், சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றாலும், நெருங்கிய பழக்கம் கொண்டவர்கள் அல்லர். ஆரம்பகட்ட விசாரணையில், தனிப்பட்ட பகையே இந்தச் சம்பவத்திற்கான காரணமாக இருக்கலாமென தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி லாட்டரி கடைக்கு வெளியே பெட்ரோல் போன்ற திரவத்தை ஊற்றி அந்தப் பெண்ணுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் அவரது உடலில் சுமார் 50 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் சந்தேக நபர் நேற்று கெப்போங் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மேல் சிகிச்சைக்காக செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.



