வட மாநிலங்களில் RON95, டீசல் விநியோகத்தில் இடையூறு; Caltex பாதிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்-18,
Caltex Malaysia, வட மற்றும் கிழக்குக் கரை மாநிலங்களில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதை உறுதிச் செய்துள்ளது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் கிளந்தான் மாநிலங்களில் உள்ள நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
துறைமுகங்களில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, விநியோகம் சில நாட்கள் பாதிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட Caltex, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள வாகனமோட்டிகள் முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும், பயணத்திற்கு முன் நிலையங்களின் புதுப்பிப்புகளை சரிபார்க்கவும் அறிவுறுத்தியது.
கடந்த வாரம், Shell நிறுவனமும் பினாங்கு மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் இதே போன்ற சிக்கல்களை சந்தித்த நிலையில், தற்போது Caltex-க்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
உலகளவில், மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றத்தால் Hormuz நீரிணை ஒரு மாதமாக மூடப்பட்டது உலகின் 20 விழுக்காடு கச்சா எண்ணெய் மற்றும் LNG எரிவாயு போக்குவரத்தை பாதித்துள்ளது.
இதனால் விலை உயர்ந்து, உலகளவில் விநியோகச் சங்கிலி பாதிப்படைந்துள்ளது.



