
சுங்கை பட்டானி, நவம்பர் 17 – இணைய சூதாட்ட மையத்தை நிர்வகித்த குற்றத்திற்காக மூன்று பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு தலா ஆறு மாத சிறைத்தண்டனையும் 5,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சுங்கை பட்டானி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி அம்மூவருக்கு இத்தண்டனையை விதித்தார்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு 12.25 மணியளவில், அமான் ஸ்கொயர் (Aman Square) கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் செயல்பட்ட இணைய சூதாட்ட மையத்தை நிர்வகிக்க உதவியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றத்தில் மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
திறந்தவெளி சூதாட்ட விடுதிகள் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மூவரும் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



