
கோலாலம்பூர், நவம்பர் 17 – பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), மலேசியாவுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தார்.
கோலாலம்பூரிலுள்ள சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்ரோன், காலை 9.25 மணிக்கு அங்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து இரு தலைவர்களும் 30 நிமிடங்கள் தனிப்பட்ட சந்திப்பிலும், பின்னர் இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஒரு மணி நேரக் கூட்டத்திலும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மக்ரோனின் இந்தப் பயணம், 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் மலேசியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணமாகும்.
கடந்த ஆண்டு மலேசியா – பிரான்ஸ் இடையிலான மொத்த வர்த்தகம் 17.78 பில்லியன் ரிங்கிட்டை எட்டியதும் குறிப்பிடத்தக்கது.



