
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 5-பாராங் கத்தியை பயன்படுத்தி ஆடவர் ஒருவரை கடந்த வாரம் வர்த்தக வளாகத்தில் வெட்டியதாக நால்வர் மீது பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
29, 26, 28 மற்றும் 23 வயதுடைய அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர்.
33 வயதுடைய ஆடவர் என்பவருக்கு காயம் விளைவிப்பதற்கு கூட்டாக இணைந்து செயல்பட்டதாக நீதிபதி இர்வான் சுவாய்போன் ( Irwan Suainbon ) முன்னிலையில் நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி காலை 8 மணியளவில் Gurney Paragan Mall வளாகத்தில் Hyundai கண்காட்சி அறையில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக தண்டனை சட்டத்தின் 120B பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டு கொண்டுவரப்பட்டது.
கடுமையான காயத்தினால் பாதிக்கப்பட்டவர் கை துண்டிக்கப்பட்டதோடு இன்னமும் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அரசு தரப்பு அதிகாரி லீ ஜூன் கியோங் (Lee Jun Keong) குற்றப் பத்திரிகையை வாசித்தபோது தெரிவித்தார்.
பரபரப்பான காலை வேளையில் பொது இடத்தில் நடத்தப்பட்ட அந்த தாக்குதல் சம்பவம் குறித்து மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து நபர்களுக்கும் நீதிமன்றம் தலா 15,000 ரிங்கிட் ஜாமின் அனுமதித்ததோடு இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என நீதிபதி Irwan Suainbon தெரிவித்தார்.



