Latestஉலகம்

பத்தாண்டுகளாக நீடித்த லீ குடும்பச் சர்ச்சைக்கு முடிவு; லீ குவான் இயூவின் 38 Oxley Road வரலாற்று இல்லத்தை கையகப்படுத்தியது சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர், ஆகஸ்ட்-1-சிங்கப்பூரின் தந்தை, மறைந்த லீ குவான் இயூவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 38 Oxley Road இல்லத்தை, சிங்கப்பூர் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகக் கையகப்படுத்தியுள்ளது.

​இதன் மூலம், இந்த வரலாற்று இடத்தை மையமாகக் கொண்டு லீ குடும்பத்தினரிடையே கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வந்த பகிரங்கச் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

தேசிய பாரம்பரிய வாரியம் (NHB) மற்றும் சிங்கப்பூர் நில அதிகார அமைப்பு (SLA) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நினவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த இடத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.

​இந்த இல்லத்தை லீ குவான் இயூவின் விருப்பப்படி இடிக்க வேண்டும் என அவரது இளைய மகன் லீ சியேன் யாங் மற்றும் மறைந்த மகள் லீ வேய் லிங் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், அதன் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் எடுத்த இந்த முடிவுக்கு லீ சியேன் யாங் தமது ஏமாற்றத்தைப் பதிவுச் செய்துள்ளார்.

இருப்பினும், 1950-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு வித்திட்ட முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற்ற இடம் என்பதால், பொது மக்களின் நலன் கருதியே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

​அந்த இடத்தை ஒரு பாரம்பரியப் பூங்காவாக மாற்றி, பொது மக்களுக்கான இடமாக மேம்படுத்துவது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​அதேவேளையில், குடும்பத்தின் தனிப்பரிமாணத்தைப் பாதுகாக்கும் வகையில், வீட்டின் உட்புறப் பகுதிகள் எவையும் காட்சிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

தற்போது அந்த இடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொது மக்கள் நுழைவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை நிறுவி சுமார் 30 ஆண்டுகள் அதன் பிரதமராக இருந்தவரான லீ குவான் இயூ, ஒரு சாதாரணக் குட்டித் தீவை உலகமே வியக்கும் மாபெரும் சக்தியாக உருமாற்றியதற்காக பெரிதும் போற்றப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!