
ஷா ஆலாம், செப்டம்பர் 29 — தாமான் ஸ்ரீ மூடாவை புரட்டிப்போட்ட 2021 பெருவெள்ளத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த 50 குடியிருப்பாளர்களுக்கு சாதகமாக ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பேரிடரின்போது மீட்பு நடவடிக்கைகளை முறையாக ஒருங்கிணைக்கத் தவறியதாகக் கூறி அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எதிராக அலட்சியம், சட்டப்பூர்வ கடமை மீறல் ஆகிய அடிப்படைகளில் குடியிருப்பாளர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை ஆணையர் ஷோபா ராஜா, பேரிடரை எதிர்கொள்வதில் அதிகாரிகளுக்கு இருந்த பொறுப்பின் அடிப்படையில், குடியிருப்பாளர்கள் முன்வைத்த அலட்சிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, வெள்ளத்தின்போது பேரிடர் நடவடிக்கையை உரிய அளவில் தீவிரப்படுத்தாதது, மைய ஒருங்கிணைப்பு அமைப்பை ஏற்படுத்தாதது மற்றும் சிறப்பு மீட்புக் குழுவை திறம்பட பயன்படுத்தாதது ஆகிய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.
இதனால் பல இடங்களில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் அரசு அமைப்புகளை விட, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் முயற்சியையே பெரிதும் சார்ந்திருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதேவேளை, ஆபத்தான நிலையை எட்டக்கூடிய வானிலை முன்னறிவிப்பு இருந்தபோதிலும், அதற்கேற்ற எச்சரிக்கை உரிய நேரத்தில் வெளியிடப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் மத்திய அரசாங்கத்துடன் சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS), ஷா ஆலாம் மாநகர மன்றம் (MBSA) ஆகியவையும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அக்டோபர் 6ஆம் தேதி வழக்கு மேலாண்மை நடைபெறவுள்ளது.



