
கோலாலம்பூர், செப்-29-வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டு ஒப்புதல்கள் தொடர்பில் 1.097 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மீதான வழக்கு விசாரணை நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது,
அவ்வழக்கு தொடர்பான இரண்டு ஆவணங்கள் இன்னும் அரசுத் தரப்புக்கு கிடைக்கவில்லை என துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி. ருபினி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனால், விசாரணைக்குத் தயாராக தங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பு கேட்டுக் கொண்டது.
இதனிடையே, 58 வயதான சரவணன் தனது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தேதியை விரைவாக நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நிலுவையில் உள்ள ஆவணங்களைப் பெறத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் டத்தோ கீதன் ராம் வின்சென்ட் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, சரவணன் தமக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து, விசாரணை கோரியிருந்தார். அவர் Vectica Resources Sdn Bhd நிறுவனத்தின் இயக்குநரிடமிருந்து Syed Amirul Syed Ahmad மூலமாக முறையே 150,000 ரிங்கிட், 350,000 ரிங்கிட் மற்றும் 597,000 ரிங்கிட் என மொத்தம் 1.097 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படுகிறது.
TYKB Engineering Sdn Bhd நிறுவனத்துக்கு 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டு விண்ணப்பத்தை அங்கீகரித்ததற்காக அப்பணம் வழங்கப்பட்டதாக சரவணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி, Bangsar, Jalan Telawi 3 மற்றும் Jalan Klang Lama பகுதியில் உள்ள Maybank Islamic Berhad கிளையிலும் அவர் அக்குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.



