‘கோலாலம்பூர், பிப் 22 – வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்துவது மற்றும் அது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டை செய்துகொள்ளும் பொறுப்பு மனித வள அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
2003 ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின் மூலம் சீனாவுடன் முதலாவது புரிந்துணர்வு மகஜர் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. இன்றுவரை 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் புரிந்துணர்வு உடன்பாடு வெற்றிகரமாக கையெழுத்திடப்பட்டுள்ளதையும் சரவணன் தெரிவித்தார்.
இந்தோனேசிய பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கும் விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கும் அண்மையில் அமைச்சரவை மனித வள அமைச்சிற்கு அனுமதி வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வியட்னாம், கம்போடியா, இந்திய மற்றும் ஸ்ரீ லங்காவுடன் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பாக புரிந்துணர்வு உடன்பாடு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளும் இறுதி வடிவம் அடைந்திருப்பதாகவும் சரவணன் தெரிவித்தார்.
அதோடு தொழிலாளர்களுக்கான உரிமைகள் மற்றும் அது தொடர்பான சட்டங்களை வரையும் பொறுப்பு மற்றும் கடப்பாட்டையும் மனித வள அமைச்சு கொண்டுள்ளதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் சரவணன் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வங்கி மூலமாக சம்பளம் பெறுவதும் விரைவில் அமல்படுத்தப்படும். உடல் உழைப்பு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமின்றி அனைத்துலக தொழிலாளர் இயக்கத்திற்கு ஏற்ப வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்குவதற்கான வசதியையும் முதலாளிகள் ஏற்படுத்த வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் 446 சட்டம் வழிவகை செய்வதையும் டத்தோஸ்ரீ சரவணன் விவரித்தார்.