
கோலாலம்பூர், மார்ச் 25 – வெளிநாட்டு தொழிலாளர்களை பெறுவதில் இந்திய உணவக உரிமையாளர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுவது மற்றும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படாமல் இருப்பது குறித்து மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரிமாஸ் தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவித்துள்ளது.
தற்போது, இந்திய உணவக உரிமையாளர்கள் புதிய வெளிநாட்டுப் பணியாளர் விண்ணப்பங்களுக்கு மனு செய்தாலும் அதற்கு அனுமதி கிடைப்பதில்லை.
மேலும் ஏற்கனவே இருந்துவரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களது ஒப்பந்தம் முடிந்து நாடு திரும்பிச் செல்பவர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களுக்கான (GANTIAN) விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை.
அதே வேளையில் , மற்ற இனங்களைச் சேர்ந்த உணவகங்களுக்கு புதிய ஒப்புதல்களும் மாற்றுப் பணியாளர்களுக்கான அனுமதியும் வழங்கப்படுகின்றன, ஆனால் இந்திய உணவகங்கள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதா பிரிமாஸ் தலைவர் டத்தோ J. கோவிந்தசாமி என்ற சுரேஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய உணவகங்களுக்கு எதிராக காட்டப்படும் நியாயமற்ற பாகுபாடு உணவக உரிமையாளர்கள் மத்தியிலும் சமூகத்திலும் கடுமையான அதிருப்திகளையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
OSC இணையதளம் வழியாகச் செய்யப்படும் விண்ணப்பங்களில் காலியிடங்கள் எதுவும் காட்டப்படவில்லை, மேலும் நேரடியாக வந்து விண்ணப்பிக்கும் முயற்சிகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் உணவக உரிமையாளர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள இந்திய உணவகங்களில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவிவருவதோடு , அன்றாடச் செயல்பாடுகளையும், வாடிக்கையாளர்களுக்குத் திறம்படச் சேவை செய்யும் வணிகங்களின் திறனையும் பாதிக்கிறது.
இந்தப் பிரச்சனையை உடனடியாகக் கவனிக்கப்படாவிட்டால், அதன் தாக்கம் உணவகத் துறையைத் தாண்டி, பரந்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் என சுரேஸ் நினைவுபடுத்தினார்.



