
ஷா ஆலாம், ஆகஸ்ட் 14 – ஷா ஆலாமின் ஸ்ரீ மூடா பகுதியில் ஒரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் கத்தி வெட்டு தாக்குதலாக மாறியதில் 38 வயது ஆடவர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
நேற்று காலை சுமார் 11 மணியளவில் ஜாலான் புக்கிட் கெமுனிங் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே பலர் சம்பந்தப்பட்ட இந்த மோதல் ஏற்பட்டது.
ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்த நிலையில், அந்த ஆடவர் பாராங் கத்தியால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் அவரது இடது கையில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையில் அவர் கிள்ளான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆடவரிடமிருந்து போலீஸ் புகார் பெற்றுள்ளதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ACP சருடின் சமா தெரிவித்தார்.
ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபட்டது, ஆபத்தான ஆயுதத்தால் கடுமையான காயம் ஏற்படுத்தியது மற்றும் துப்பாக்கியைப் போன்ற பொருளை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் விசாரணை நடைப்பெற்று வருகிறது.



