மக்கோத்தா, செப் 23 – கட்டாய ஹலால் சான்றிதழ் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வை கண்டது போல, நாட்டில் இன நல்லிணக்கைத்தைப் பேணவும் இந்தியர்களின் நலனை உறுதி செய்யவும் ம.இ.கா-வும் அதன் கூட்டணியுமான தேசிய முன்னணி மிக அவசியம் என்று கூறியுள்ளார் ம.இ.கா-வின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன்.
“இந்தியர்களின் நலனை பாதுகாக்கும் ஒரே கட்சியாக ம.இ.கா- வால் மட்டுமே செயல்பட முடியும். இது கடந்த 50 ஆண்டுக் காலகட்டத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை.”
“கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பல மாற்றங்கள் வந்தாலும், இந்தியர்களுக்கென குரல் எழுப்ப சக்தி கொண்ட ஒரே கட்சி, அது இன அடிப்படையிலான ம.இ.கா-தான் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள்” என நேற்று ஜோகூர் மக்கோத்தா தொகுதியில் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது விக்கினேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
தற்போது சுமார் 80 விழுக்காட்டு மக்கோத்தா இந்திய வாக்காளர்கள், தேசிய முன்னணி வேட்பாளரான Syed Hussein Syed Abdullah-வுக்கு ஆதரவாக இருப்பது தெரிகிறது என்றார் அவர்.
அவ்வகையில், இந்தியர்கள் கடந்த கால, எதிர்கால அரசியல் மற்றும் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த இடைத்தேர்தலில் விவேகமாக சிந்தித்து வாக்களிக்கப்பார்கள் என விக்னேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.