
புத்ராஜெயா, ஜனவரி-30 – பாலஸ்தீன மக்களின் இன்னல்களைக் குறைக்கும் நோக்கில் காசாவில் ஒரு பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் மசூதியை மலேசியா நிர்மாணிக்கவுள்ளது.
GLC எனப்படும் அரசாங்க தொடர்புடைய நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், வர்த்தக பெரு நிறுவனங்கள், தனியார் துறையினர் மற்றும் மலேசிய மக்களின் ஒத்துழைப்போடு அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வீடியோ வாயிலாக அதனைத் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், காசாவின் மறு நிர்மாணிப்புப் பணிகளைத் துரிதப்படுத்த ஏதுவாக கிழக்காசியத் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியமொன்றை ஏற்படுத்தவும் மலேசியாவும் ஜப்பானும் இணக்கம் கண்டுள்ளன.
காசாவின் மறுநிர்மாணிப்பை குறிக்கோளாகக் கொண்டுள்ள CEAPAD அமைப்பின் இணைத் தலைவராக செயல்படவும் மலேசியாவுக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிதியத்தின் வழி காசாவுக்கான நமது அனைத்துத் திட்டங்களும் நிறைவேறும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
காசாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்திருப்பதால் அங்கு மறுநிர்மாணிப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டியுள்ளதாக டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
இஸ்ரேலின் தாக்குதலில் ஏறக்குறைய முற்றாக சேதமடைந்த காசாவை மறுநிர்மாணிக்க, 1 ட்ரில்லியன் டாலருக்கும் மேல் செலவாகலாமென பிரதமர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான 15 மாத கால போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஜனவரி 19-ஆம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.